பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அபுதாபி சென்றடைந்த பிரதமர் மோடி, பட்டத்து இளவரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாரீசில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கு அதிபர் இமானுவெல் மேக்ரனை சந்தித்த அவர், இரு தரப்பு நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான், பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் ரெஜிமெண்ட் வீரர்கள் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். உலக போர்களின்போது இந்திய ராணுவத்தினர், பிரெஞ்சு ராணுவத்தினருடன் இணைந்து போரிட்டதை நினைவுகூர்ந்தார். இருநாடுகளும் பல்வேறு துறைகளில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடு பிரான்ஸ் என்று கூறினார். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என உறுதியளித்த பிரதமர் மோடி, இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்சில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். ராணுவ ஒத்துழைப்பு, மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் இணைந்து பிற நாடுகளுக்கு உதவுவோம் என்றும் தெரிவித்தார்.
பின்னர், தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். அவருக்கு அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது சிறப்பான வரவேற்று அளித்தார். இருவரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.







