பயிற்சி பேராசிரியர்களாக பணிபுரிய அனுமதி – வரைவு அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக்குழு

பல்துறை சார்ந்த அனுபவம் வாய்ந்த நபர்களை பயிற்சி பேராசிரியர்களாக 3 ஆண்டு காலத்திற்கு உயர்கல்வி நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கும் வகையிலான வரைவு அறிக்கையினை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.   தொழிற்சாலைகள், நிறுவனங்களின் தேவை…

பல்துறை சார்ந்த அனுபவம் வாய்ந்த நபர்களை பயிற்சி பேராசிரியர்களாக 3 ஆண்டு காலத்திற்கு உயர்கல்வி நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கும் வகையிலான வரைவு அறிக்கையினை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

 

தொழிற்சாலைகள், நிறுவனங்களின் தேவை சார்ந்து மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கலை, இலக்கியம், ஊடகம், அரசியல், நிர்வாக பணி, சட்டம் உள்ளிட்ட பல துறை சார்ந்தவர்கள் உயர்கல்வி நிலையங்களில் பயிற்சி பேராசியர்களாக பணியாற்ற முடியும் என புதிய வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3 ஆண்டு காலத்திற்கு பயிற்சி பேராசிரியர்களாக பணியாற்றலாம் எனவும் கூடுதலாக 1ஆண்டிற்கு அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிலையங்கள் இவ்வாறாக நிர்ணயிக்கும் பயிற்சி பேராசிரியர்களின் எண்ணிக்கை தங்கள் கல்வி நிலையங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் எண்ணிக்கைக்கு 10 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பது, பாடங்கள் எடுப்பது உள்ளிட்ட பணிகளில் பயிற்சி பேராசிரியர்களை பயன்படுத்தலாம். வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் திறன்களை வளர்ப்பது அவசியமாகிறது. மேலும் தங்களின் தேவைக்கு ஏற்ற தொழில் சார்ந்த அறிமுகம் மற்றும் திறன் உள்ள ஆட்களை மட்டுமே பணியமர்த்த நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் தற்போது விரும்புகின்றன என தெரிவித்துள்ளது.

 

இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு சார்ந்த வேலைவாய்ப்பிற்கு தேவையானவற்றை கல்லூரியில் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி பேராசிரியர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.