நாமக்கல்லில் வாகனம் மோதி சேதமடைந்த பெரியார் சிலையை காவல்துறையினர், அதே இடத்தில் நிறுவினர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் உள்ள பிரதான சாலையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் உள்ளன. மார்பளவில் உள்ள இந்த 3 சிலைகளும் கடந்த 1994-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நிறுவப்பட்டது. இந்த மூன்று தலைவர்களின் சிலைகளும் கம்பி வலைகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலை நேற்று மாலை திடீரென சேதப்படுத்தப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார் சிலையை துணியை கொண்டு மூடி மறைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் சிலையை சேதப்படுத்தினார்களா? அல்லது வாகனம் மோதியதில் சிலை சேதம் அடைந்ததா? என அங்கு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மினி சரக்கு வாகனம் ஒன்று சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, நடத்திய விசாரணையில் மினி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நல்ல பாளையத்தை சேர்ந்த அருண் (வயது 32) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சரக்கு வாகனத்தில் டீசல் பிடிக்க வந்த போது எதிர்பாரத விதமாக சிலை மீது வாகனம் மோதியதால் சிலை சேதமடைந்ததாக தெரிவித்தார்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த பெரியார் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. ஆனால் தொடர்ந்து அந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








