“மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களின்றி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்”

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணமுன்றி முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு…

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணமுன்றி முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பராமரிப்பில் முன்மாதிரி மாநிலமாக முன்னேறி வருகிறது. இத்திட்டத்திற்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கு ரூ. 1,547 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத் துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் பல வருடங்களாக இருக்கும் 311 ஆண்கள் மற்றும் 209 பெண்கள் என்று மொத்தம் 500 பேர் தங்களுக்கு என்று எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இருந்ததால் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய முடியாமல் இருந்தது.

தற்பொழுது பல ஆலோசனைக்குப் பிறகு கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இருக்கும் மன நல நோயாளிகளும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

குடும்ப அடையாள அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணமும் இல்லாமல் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.