அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு 100% கட்சியில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பயணியர் மாளிகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி நகராட்சி 12வது திமுகவை சேர்ந்த ரவி தலைமையில் 300 பேர் அதிமுகவில் இணைந்து கொண்டனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் பொன்முடி பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் என கொச்சைப்படுத்த பேசுவது சரியல்ல. இதுபோன்ற செயல்கள் வருத்தமளிக்கிறது. அமைச்சர்கள் மக்களை கேவலப்படுத்துவதாக பேசுவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பள்ள தோண்டப்பட்டு பணிகள் நடைபெறவில்லை. திட்டமிட்டு அரசு செயல்படுத்தவில்லை. இதனால் சென்னை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
தமிழகத்தில் அதிமுக வலிமையாக எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக பொது செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அதிமுகவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு இனிமேல் அதிமுகவில் இடமில்லை. அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு 100% கட்சியில் இடமில்லை என்று கூறினார்.
அதிமுக அபரிவிதமான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் வேண்டுமென்றே சில பேர் அதிமுகவைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். . தமிழகத்தில் பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அரசு கும்பகர்ணனை போல் தூங்கி வருகிறது என்று தெரிவித்தார்.








