கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஓடும் பேருந்தில் இருந்து திடீரென வெளியேறிய புகையின் காரணமாக, பதட்டமான பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறி சென்றனர்.
கோவையில் இருந்து அன்னூர் வழியாக சத்திய மங்கலத்துக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் பேருந்து ஒன்று வழக்கம் போல, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அன்னூர் அருகே பசூர் பகுதிக்கு பேருந்து வந்தபோது, எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென
புகை வெளியேறி பேருந்து முழுவதும் பரவியது.உடனடியாக ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.
இதனால், பயணிகள் அலறியடித்தவாறு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பேருந்தில் இருந்து வெளியேறிய புகை சாலை முழுவதும் பரவி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக, அந்த சாலை வழியாக வந்த பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தபட்டது. இதையடுத்து, மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் குறைவதால் எஞ்சின் வெப்பமடைந்து புகை வெளியேற வாய்ப்புள்ளதாகவும், ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும் முன்பு ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் உள்ளதா என்பதை கட்டாயம் சோதிக்க வேண்டும் என்றும் பேருந்து பழுது நீக்கும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.







