எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. முதல் நாளான அன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.…

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. முதல் நாளான அன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இரண்டாம் நாளான நேற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மூன்றாம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும், அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பால் மற்றும் தயிர் பாக்கெட்டுக்களை காண்பித்து அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்களிடம், சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை கோரிக்கை விடுத்தார். இருக்கையில் அமருமாறும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற அனுமதிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், அமளி தொடர்ந்ததால், முதலில் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை மீண்டும் 4 மணிக்குக் கூடியது. அப்போதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.