தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும் எனக் கரூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருச்சி செல்லும் வழியில் காளியப்பனூர் பகுதியில் உள்ள பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்நாத் இல்லத்திற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார். அப்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், வரும் 17-ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சார்பில் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதால் அந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்கக் கூடாது எனத் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டம் தமிழர் நலனுக்கு எதிரானது எனவும், மேகதாது அணை கட்டுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையர் ஒருதலை பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், ஒரே நாடு – ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று எனவும், இந்திய அரசியல் சட்டத்தில் அது போன்று ஒன்றும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமாக, எதிர்க் கட்சியாக ஆக்கப்பூர்வமாக பாமக செயல்படுகிறது எனத் தெரிவித்தார். நாங்கள் எதிர்க்கட்சிகள் தான், எதிரி கட்சிகள் இல்லை எனக் கூறிய அவர், காவிரியில் மணல் எடுப்பதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும், இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் பாமக சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
அண்மைச் செய்தி: ‘குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; நூதன விழிப்புணர்வு பேரணி’
மேலும், காவிரி ஆற்றில் 48 குவாரிகள் செயல்பட்ட நிலையில், நீதிமன்றம் சென்று அந்த குவாரிகளை மூடியது பா.ம.க எனக் குறிப்பிட்ட அவர், தற்போது 4 குவாரிகள் மட்டுமே செயல்படுவதாகத் தெரிவித்தார். சட்டசபைத் தேர்தல் வியூகம் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனக் கூறிய அவர், இப்போது அதைப் பற்றிக் கூறினால் காப்பி அடித்து விடுவார்கள் எனக் குறிப்பிட்ட அவர், பாமக 2.0 காந்தி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








