தமிழ்சினிமாவில் ‘ரூட்டு தல’ என்று புகழப்படும் பா.ரஞ்சித்தின் அடுத்த பட்டைப்பான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வழக்கம் போலவே பல்வேறு வரவேற்புகளையும், சில பல எதிர்ப்புக்களையும், பல சில சர்ச்சைகளையும் தாங்கிக்கொண்டு திரைக்கு வர தயாராக இருக்கிறது இப்படம். சமகால லவ் பத்தி ஒரு நாடகம் பண்ணலாம்..” எனும் வசனத்தோடு சமகால காதல்கள் பற்றிய தன்னுடைய படத்தின் ட்ரெய்லரை தொங்கியிருக்கிறார் ரஞ்சித்.
என் சிரிப்பு, அழகு.. எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்ன்னு அவன் தான் உணர்த்துனான்” எனும் வசனம் இதில் இடம்பெறுகிறது. பொதுவாக அழகு என்பது variable. ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றவாறு எது அழகு யார் அழகு என்பது வேறுபட்டுக்கொண்டே செல்லும்! தொன்றுதொட்டு உலகு அழகி என்று போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராயை ரசிக்காதவர்களும் இருக்கிறார்கள். ஒருவரை பார்த்தவுடனே அவரின் முகம் மற்றும் உடல் அமைப்புகளால் நாம் இயல்பாகவே கவரப்படலாம். ஆனால் அவர்களின் அணுமுறை, மணப்பான்மை, ரசனை உள்ளிட்டவைகள் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த ஈர்ப்பு இயல்பாகவே குறைந்துவிடும். முதல் பார்வையில் நம்மை கவராதவர்கள் கூட தங்களின் style மற்றும் attitude-களால் எளிதாக நம்மை ஆக்கிரமித்துவிடுவார்கள். மாதவன் நடித்த ஜே.ஜே. படத்தில் ஒரு வசனத்தில் ‘ ஹாலிவுட் படத்துலயெல்லாம் முதல்ல அந்த ஹீரோயின் நமக்கு அவ்ளோ அழகா தெரியமாட்டாங்க. ஆனா கிளைமேக்ஸ்ல அவங்களை விட யாரும் அழகா தெரியமாட்டாங்க’ என்று இடம்பெற்றிருக்கும். அழகு பற்றியான இத்தனை பெரிய விளக்கத்தை மேலே சொன்ன ஒரு வரி வசனத்தைக்கொண்டே இயல்பாகவும் கவித்துவமாகவும் பார்வையாளர்களுக்கு கடத்துவது தான் ரஞ்சித் ஸ்டைல்!.
ட்ரெய்லரை பார்க்கும் போது, ஒரு தியேட்டர் நாடகக் குழுவில் இருக்கும் நண்பர்களின் வாழ்வில் காதல் தொடர்பாக நடைபெறும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களை வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து கேங்ஸ்டர், ஆக்ஷன் போன்ற படங்களை எடுத்துவந்த பா.ரஞ்சித் முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாக வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்கிற தன் ஆர்வத்தை நீண்ட நாட்களாகவே வெளிப்படுத்தி வந்தார். வெகுசன மக்களால் நகைச்சுவை படமாக கொண்டாடித்தீர்க்கப்பட்ட ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தியே கூட ஒரு காதல் படம் தான். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் வுடி ஆலன்( woody allen). இவரின் பெரும்பாலான படங்கள் காதலை மையப்படுத்தி நகைச்சுவை கலந்தே இருக்கும். காதல் என்பது புணிதப்படுத்தபடாமல் ஒருவருக்கு இயல்பாக பல முறை நிகழலாம் என்பதை எளிமையாக காட்சிப்படுத்துவது இவரின் ஸ்டைல். படத்தின் முக்கிய கதாப்பத்திரங்கள் திடீரென ஆடியன்ஸை நோக்கி ‘நீங்களே சொல்லுங்க நான் பண்னது சரிதானே’ என்பது போலான கேள்விகளை வைத்து நாமும் இதுபோலான சம்பவங்களை கடந்துவந்ததை நினைவு கூறும். இவர் படங்களின் ஒவ்வொரு காதலின் இருத்தலிலும் பிரிவிலும் இருக்கும் சாதக பாதகங்கள், இன்ப – துண்பங்கள் என அனைத்தையும் இயல்பான நகைச்சுவை பாணியில் காட்சிப்படுத்தினாலும் அதிலிருக்கும் மெல்லிய துண்பங்களையும் நம்மால் உணரமுடியும். தமிழ் சினிமாவில் அப்படியொரு அற்புத முயற்சியாக வந்த திரைப்படம் தான் அட்டகத்தி! வெறும் நகைச்சுவை படமாக மட்டுமல்லாமல், காதலும், பிரிவும் இயல்பாக நிகழக்கூடிய, எதார்த்தமாக கடக்கக்கூடிய ஒரு அடிப்படை எளிய உணர்வு தான் என்பதை கலைத்துவத்துடன் நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருப்பார் ரஞ்சித். அதே வேலையில் வட தமிழ்நாட்டில் அதுவும் சென்னைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய புறநகர் மற்றும் கிராமங்களில் எளிய மக்களின் வாழ்வியலையும், கொண்டாட்டங்களையும், உறவுமுறைகளையும் மிக யதார்த்தமாக நமக்கு கொண்டு சேர்த்திருப்பார்.
அப்படம் வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் முழுக்க முழுக்க தற்கால காதலை மையமாக வைத்து ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. இது காதல் படமல்ல காதலை பற்றிய படம் என்பதே ரஞ்சித் முன் வைத்திருக்கும் Statement. இருவருக்கிடையே மனமொத்து இயல்பாக முளைக்கும் காதலுக்கிடையில் சாதியமும், மதமும் உள்ளே புகுந்து காதலுக்கும் காதலர்களுக்கும் இழைக்கும் அநீதிகளைக்கொண்டே ஆயிரம் படங்கள் எடுக்கலாம். இந்நிலையில் முதிர் வயதில் வரும் காதல், ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் மீது வரும் காதல், ஒரு ஆணுக்கு மற்றொரு ஆண் மீது வரும் காதல், ஒரு ஆணுக்கு திருநங்கை மீது வரும் காதல் என காதலின் பல அழகிய கிளைகளை பற்றிய கலைப்பூர்வமான உரையாடலை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ரஞ்சித். நான் முன்னுக்கு வர்றதுதான் உனக்கு பிரச்சனைன்னா நான் முன்னுக்கு வருவேண்டா’ எனும் கமர்ஷியல் ஹீரோ பஞ்சுகளுக்கே ரஞ்சிதை பிடித்து பிராண்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் பழமைய்வாதிகளும், ஆதிக்க சக்திகளும். இந்நிலையில், ‘லவ்வுன்னா பையனுக்கு பொண்ணு மேலயும், பொண்ணுக்கு பையன் மேலயும்தான் வரணுமா? ஏன் பொண்ணும் பொண்ணும், பையனும் பொண்ணும் லவ் பண்ணக்கூடாதா?’, ‘தாலி கட்டுனாதான் நம்ம லவ் கண்டினியூ ஆகும்னா, லவ்வோட வேல்யூ அவ்வளவு தானா?’ போன்ற பல்வேறு வசங்கள் இடம்பெற்றிருப்பது அவர்களுக்கான ஓவர் டைம் டியூட்டியை உறுதிபடுத்தியுள்ளதாக நம்மால் உணர முடிகிறது.
‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் இப்படத்தின் தலைப்பேகூட ஏதோ இரண்டு காதலர்கள் கடற்கரையில் உட்கார்ந்து நட்சத்திரத்தை ரசித்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது போல் இருக்கவில்லை. பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெரு வெடிப்பு ஏற்பட்டு இந்த ஆண்டம் விரிவடைந்துகொண்டே சென்றதோடு காலப்போக்கில் அதன் துகள்கள் ஒன்றிணைந்து நட்சத்திரங்களாக உருவெடுக்கிறது. இந்த தொடர் விபத்துக்களின்..நகர்வுகளின்..மாறுதல்களின் ஒரு பகுதிதான் சூரியன் எனும் நட்சத்திரத்தில் இருந்து பிரிந்து வந்த நம் பூமி. அதில் நடைபெற்ற வேதியல் மாற்றங்களால் உருவாகி பரிணாமம் அடைந்தவைகள் தான் இந்த உலகின் அனைத்து உயிர்களும். உண்மையில் நாமெல்லாமே நட்சத்திரத்தின் ஒரு அங்கம் தான்.இன்னும் சரியாக சொன்னால் நாமே நட்சத்திரம் தான். இந்த நட்சத்திர துகள்களின் தொடர் நகர்வுகளின் விளைவுகள் தான் நம் உடலும் அதன் மூலம் நிகழும் காதலும் காமமும். இந்த தொடர் நகர்வுகளில், இதுதான் காதல், இன்னார்க்கு இன்னார்மேல் தான் வரவேண்டும் என்று குறிப்பிட்ட ஒருவரோ அல்லது ஒரு பெருங்குழுவோ எப்படி தீர்மாணிக்க முடியும் என்பதே சாதி, மத மறுப்பு மற்றும் தன்பாலின ஈர்ப்பு காதலர்களின் ஆயிரமாண்டுகால கேள்விகளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
காதலனை மணந்த இளைஞன் என்று ஒரு செய்தியை சமூகவலைதளங்களில் கண்டால் கூட ஒட்டுமொத்த பூமர்த்தனத்தையும், புலிப்பு காமெடிகளையும் கமெண்டுகளாக்கி வசைபாடுவது பழமைவாதிகளின் வாடிக்கை. குறிப்பிட்ட இருவரும் இணைந்து வாழ்வதால் வசைபாடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் பிரிவதன் மூலம் அந்த ஜோடிகளின் வாழ்க்கையே பாதிப்புதான். குழுவாக ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் போது கூட, ‘உனக்கென்ன வேணும்’ என்றுதான் கேட்டுக்கொள்வோம்! உடன் வருபவருக்கு பிடிக்காத உணவை ஆர்டர் செய்து அவரை சாப்பிட கட்டாயப்படுத்தும் நபர்களை சேடிஸ்ட் என்று நாம் சொல்லமாட்டோமா!? அப்படி இருக்க காதல் மற்றும் காமம் தொடர்பான தனிநபர் தேர்வுகளை தீர்மானிக்கவோ, மாற்றவோ நாம் எங்கிருந்து யாரிடமிருந்து உரிமை பெறுகிறோம்! அதுவும் ஒட்டுமொத்த சமூகத்தில் பெரும்பாண்மையானோர்கள் எப்படி இதை கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் செய்கிறார்கள்? என்ற கேள்விகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
அந்த கேள்விகளுக்கும், உரையாடல்களுக்கும், தேர்வுகளுக்கு கலைவடிவும் வடிவம் கொடுத்து வெகுசன மக்களிடத்தே கொண்டு சேர்க்கும் பா.ரஞ்சித்தின் முயற்சியை நாம் மனமுவந்து பாராட்டியே ஆக வேண்டும்! காமெடி, ஆக்ஷன்,காதல் என எந்த ஜானர்களின் படங்கள் வந்தாலும் எதேவொரு வகையில் அந்த சமூகத்தின் சிக்கல்களை, அழகியலை பிரதிபலிக்கத்தான் செய்யும். உண்மையில் 100 காதல் படங்கள் வருகிறதென்றால் குறைந்த 30 படங்களாவது மேற்சொன்ன காதல்கள் பற்றியும் அதன் அழகியல் தொடர்பாகவும், சிக்கல்கள் குறித்தும் வந்திருக்கவேண்டுமல்லவா?
அட்டகத்தி தொடங்கி தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சாதிய இறுக்கங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து பல்வேறு தளங்களில் கதைக்களம் அமைத்து விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவரின் படைப்புகளுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குநர்கள் மட்டுமல்லாமல் மூத்த இயக்குநர்களுமே கூட சாதியத்திற்கு எதிரான கருத்துக்களைக்கொண்டு தங்களின் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினர். தலித் சினிமாவுக்கான ‘ரூட்டுத்தல ரஞ்சித்’என்றும் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் காதல் மற்றும் உறவுமுறை தொடர்பான அவரின் இந்த படைப்பும் வெற்றிபெரும் பட்சத்தில் அடுத்தடுத்த பல படைப்பாளிகளுக்கும் இதுபோன்ற கலைப்படைப்புகளை உருவாக்க உந்துசக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
– வேல் பிரசாந்த்







