தேர்தலின்போது வாக்குச்சாவடி அலுவலரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல இந்தி நடிகருமான ராஜ்பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை அக்கட்சியில் வகித்தவர் ராஜ்பாப்பர். பிரபல இந்தி நடிகரான ராஜ்பாப்பர் 3 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலின்போது வாக்குசாவடி ஒன்றில் அங்குள்ள அலுவலரை தாக்கி அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ராஜ்பாப்பர் மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். 26 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த இந்த வழக்கில், லக்னோவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ராஜ்பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதால் உடனடியாக சிறையில் அடைக்கப்படவில்லை. தமக்கு சிறை தண்டனை விதித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செய்தியாளர்களிடம் ராஜ்பாப்பர் தெரிவித்தார்.







