2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் அகாடமி புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் அகாடமியின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படும் 397 பேரை தேர்வு செய்து ஆஸ்கார் அகடமி புதிய உறுப்பினர்களுக்காக அழைப்பு விடுத்துள்ளது.
இதில் தமிழின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் நபராக நடிகர் சூர்யா உள்ளார்.
சமீபத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கர் அகடமின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் திரையிடப்பட்டிருந்தது. அதே போல சூர்யா நடித்த சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னால் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது. ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.








