தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என குறிப்பிட்ட அவர், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங் களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தீபாவளியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 29 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்த பாலசந்திரன், அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில், அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 117 சதவீதம் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.








