அதிமுக பொதுக்குழுவை புறக்கணிக்கிறார் ஓ.பி.எஸ் ?

அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில், அதனை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   பரபரப்பான அரசியல் களத்திற்கு நடுவில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையை அடுத்த…

அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில், அதனை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பரபரப்பான அரசியல் களத்திற்கு நடுவில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. மேலும் உறுப்பினர்கள் காலையில் இருந்தே பொதுக்குழுவுக்கு செல்கின்றனர்.

 

கடந்த முறை போலி அடையாள அட்டையை பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், இந்த முறை பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்களுக்கு கியூஆர் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

 

பெரும்பாலானோர் அதிமுக-விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளனர். மேலும் இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தலைமையாக தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த பொதுக்குழுவை புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இல்லத்தில் வைத்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தான் ஒற்றை தலைமையாக நீடிக்க வேண்டும் என அவரது ஆதுரவாளர்கள் ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்து வருவதாகவும் அங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

 

ஒற்றை தலைமை முடிவு இறுதியாகுமா? அல்லது பொதுக்குழு சலசலப்புடன் நிறைவடைய போகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என மூத்த அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.