ஜூலை11ந்தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில், அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.
இந்நிலையில், ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தனது உத்தரவை வழங்கினார். ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என தனது கேவியட் மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.







