ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் பிரிவு அண்ணன், தம்பி பிரச்னை தான்- செல்லூர் ராஜூ

அதிமுகவிலிருந்து ஒரு தொண்டர் கூட பிரிந்து செல்ல கூடாது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போல தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை…

அதிமுகவிலிருந்து ஒரு தொண்டர் கூட பிரிந்து செல்ல கூடாது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போல தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வில் அதிமுக சட்டமன்ற அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல திமுகவினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். இதனை கண்டிக்காத தமிழக முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று குற்றம்சாடினார்.

ஒன்றரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் பாஜகவை விட திமுக மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிக்க எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளனர் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டு போகப்போவதில்லை, திமுக மீதுள்ள வெறுப்பில் மக்களே தங்களுக்கு வாக்குகளை செலுத்திவிடுவார்கள். கூட்டணி என்பது நிரந்தரமானது அல்ல. தேர்தல் நேரத்தில் பாஜக உடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறி கொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறி செல்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும், இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாத ஒன்று. ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியை கொண்டு வந்துள்ளோம். ஒபிஎஸை மீண்டும் கட்சியில் ஏற்று கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்ல கூடாது என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

காளிமுத்து, ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான். எனவே, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம் என்று கூறினார்.

பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.