அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியைவிட்டு நீக்குவதாக பொதுக்குழுவிலேயே அறிவித்தார்.
எனினும் இதனை நிராகரித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தற்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் எனக் கூறி வருகிறார். அதன் அடிப்படையில் அதிமுகவில் நியமனங்களையும், நீக்கங்களையும் மேற்கொண்டு அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வகித்த பதவி இது. அதே போல் துணை ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமிப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்ப்பட வேண்டும் என திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் இபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். இந்த வாதத்தை அடிப்படையாக வைத்து ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர், செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதால் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்தாகாது என கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என்பதே அவர்கள் வாதம். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றில் இதனை ஓபிஎஸ் தரப்பு எடுத்துரைத்தது. இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாகக் கூறியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒரு பதவிக்கு எப்படி ஒருவரை நியமிக்க முடியும் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 9 மாவட்டச் செயலாளர்களை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமனையும் அதிமுகவிலிருந்து நீக்குவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-எஸ்.இலட்சுமணன்







