சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது, வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகளில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால் குழப்பம் ஏற்படுவதால், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் பட்டியலிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சிபிஐ விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வழக்கு ரத்து மற்றும் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பொன் மாணிக்கவேல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி-யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராகவும் அவமதிப்பு வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும என உத்தரவிட்டது. மேலும் கூடுதல் மனு ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்








