முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாலும், காழ்ப்புணர்ச்சியாலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், திமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை செய்கிறது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, சி.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரின் இல்லங்களிலும் இதேபோல சோதனை நடத்தியதும் அதே காரணத்தால்தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை மடைமாற்றுவதற்காக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு, ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர். மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்த திமுக அரசை எதிர்த்து, அதிமுக வரும் 17ஆம் தேதி போராட்டத்தை அறிவித்திருந்ததாகவும்,
அதனை தடுக்கவே, லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியிலேயே, இன்னல்களை சந்தித்து வெற்றி பெறுவோம் எனவும், இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், நேர்மறை அரசியலை முன்னெடுத்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.







