சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவா் கருவிகளை தொடர்ந்து செயல்பட வைப்பது சந்தேகம் தான் என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் உள்ளிட்ட இந்தியாவின் விண்வெளி ஆய்வு திட்டங்களிலும் , இந்திய விண்வெளி ஆய்வு மையங்களிலும் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த 9 மூத்த விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
‘ஒளிரும் தமிழ்நாடு , மிளிரும் தமிழர்கள் ‘ எனும் தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை , சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விஞ்ஞானிகள் நாராயணன், இராஜராஜன்,சங்கரன்,வனிதா, ஆசிர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது :
தொடர்ந்து ‘சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டா், ரோவா் கருவிகளைச் செயல்பட வைப்பது சந்தேகம் தான். ஏனெனில் நிலவில் சூரிய ஒளியின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனாலும் நிலவு பற்றிய ஆய்வுகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது. இவை நிலவைப் பற்றிய எதிா்கால ஆய்வுத் திட்டங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமை கிடைத்துள்ளது.
சந்திராயன் நோக்கம் நிறைவடைந்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுட்காலம் என்பது ஒரு முழு நிலவு நாள்தான் அதற்கு மேல் அதிலுள்ள கருவிகளை இயக்குவதற்கான சக்தி இல்லை.
அப்படி இயக்க வேண்டுமெனில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சூரிய ஒளி மின்சக்திதான். இந்த மின்சக்தியைப் பொருத்தே திட்டத்தின் ஆயுட்கால அளவு உள்ளது. ஆனால், போதிய அளவுக்கு வெப்பம் கிடைத்தால்தான் சூரியஒளி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.
நிலவுப் பகுதியில் மைனஸ் 150 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 175 செல்சியஸ் வரை வெப்ப நிலை அளவு இருக்கும். எனவே, இந்த அளவு வெப்பத்தை வைத்து சூரியஒளி மின்சக்தியால் கருவிகளின் இயக்குவது சந்தேகம் தான். இதனால் தொடா்ந்து லேண்டா் மற்றும் ரோவா் கருவிகளைச் செயல்பட வைப்பதும் சந்தேகம்தான் என அவர் தெரிவித்தார்.