அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில் சந்திப்பு ஏன் என ரவீந்திரநாத் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும், அவரது மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து ரவீந்திரநாத் பாராட்டு தெரிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தம் மீது எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவிற்காக இடைத்தேர்தல் உள்பட 25 தேர்தல்களில் தாம் களப்பணியாற்றி உள்ளதாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலத்திலும் மாணவர் பருவத்திலிருந்தே தாம் கட்சிப் பணி ஆற்றியுள்ளதாகவும் ரவீந்தரநாத் கூறினார்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தாம் நினைத்தபோது தமது தந்தை ஓபிஎஸ் வேண்டாம் என்று தடுத்ததாக கூறிய ரவீந்திரநாத், எனினும் சீட் கொடுங்கள் நிச்சயம் ஜெயித்துக்காட்டுகிறேன் என உறுதியாக எடுத்துக்கூறி தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றதாக தெரிவித்தார். அதன்படி ஜெயித்துக்காட்டி, அந்த தேர்தலில் அதிமுக பூஜ்யம் ஆவதை தாம் தடுத்ததாகவும் ரவீந்திரநாத் கூறினார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோற்றுவிட்டது என்கிற நிலை ஏற்படாமல் தடுத்து ஒரு இடத்திலாவது வென்று காட்டியதற்காக தமக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக அரசு விரும்பியதாக ரவீந்திரநாத் கூறினார். 1998ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிக்காததால் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தால் அதனை ஏற்க தாமும் தயாராக இருந்ததாக ரவீந்திரநாத் தெரிவித்தார். ஆனால் மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் மட்டும் கொடுத்தால் கட்சியில் குழப்பம் ஏற்படும், இரண்டு இடம் வேண்டும் என இபிஎஸ் தரப்பினர் கேட்டக்கட்டு, தாம் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாகவும் ரவீந்திரநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களை அதிகம் கேட்டுப்பெறலாம் என்பதாலேயே மத்திய அமைச்சராக தாம் விரும்பியதாகவும் அவர் கூறினார்.
திசா கமிட்டியில் உறுப்பினராக உள்ளதாலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாம் சந்தித்ததாகக் கூறிய ரவீந்திரநாத், மக்கள் பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காகத்தான் இந்த சந்திப்பு என்றும், அரசியல் நோக்கங்களுக்காக அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.







