தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கு, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்காலிகமாக தனியார் மற்றும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள இந்த 4 கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 கல்லூரிகளிலும் நடப்பாண்டிலேயே, BCA, B.Com., BBA., B.Sc., Computer Science ஆகிய 4 பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் Ph.D., பாடப்பிரிவுகள் துவக்க அனுமதி அளித்து உயர்க்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை, திருப்பூர் ஆகிய 10 இடங்களில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் Ph.D., படிப்புகள் துவக்க அனுமதி அளிக்கப்ப்டடுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கும், ஏற்கனவே உள்ள பேராசிரியர்களைக் கொண்டே Ph.D., படிப்புகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








