மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில்  நடைபெற்று வருகிறது. இதுவரை 54 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 55வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடங்கினர். 

பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து, 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை மயங் அகர்வால் பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். நிதிஷ் ரெட்டி 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. ஷாபாஸ் அகமது தனது விக்கெட்டினை 16வது ஓவரின் முதல் பந்திலும் மார்கோ யான்சென் 5வது பந்திலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இவர்களது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். 

18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 173 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் மற்றும் சன்விர் சிங் தங்களது விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.