இந்திய மகளிரணி இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானதை அடுத்து ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற அளவில் தொடரை இந்திய அணி முதலில் வென்றது. இதையடுத்து 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது. இந்த நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேசம் மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு , 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி சார்பில் விளையாடிய பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது கைவசம் 1 விக்கெட் இருந்தும் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையான நிலையில், தற்போது அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஹர்மான்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த போது, நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்க அதிர்ச்சியான அவர், ஆக்ரோஷமாகி தனது பேட்டினை கொண்டு ஸ்டெம்பினை அடித்து, நடுவரிடம் பேட்டால் பட்டதெனவும் வாதிட்டு சென்றார். பின்னர் போட்டி முடிந்தப் பிறகு நடுவர்கள் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக கூறினார். தற்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்த செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/nibraz88cricket/status/1682747736968527877?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








