தமிழ்நாட்டில் சத்துணவுதிட்டமும் – முதலமைச்சர்களும்

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டம், வெவ்வெறு காலங்களில் எவ்வாறு உருமாறி மாணவர்களின் பசியின்மையையும், கல்வி வளர்ச்சிக்கும் உதவியது என்பதை தற்போது பார்க்கலாம்..   குழந்தைகள் கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் நாட்டை…

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டம், வெவ்வெறு காலங்களில் எவ்வாறு உருமாறி மாணவர்களின் பசியின்மையையும், கல்வி வளர்ச்சிக்கும் உதவியது என்பதை தற்போது பார்க்கலாம்..

 

குழந்தைகள் கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் நாட்டை மதிப்புமிகு மனிதவளமாக மாற்ற முடியும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்”. இதன் மூலம் ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 

தமிழ்நாட்டில், பச்சிளம் குழந்தைகளின் பசி போக்கிய திட்டம், கல்வி அறிவு சதவீதத்தை உயர்த்திய திட்டம், 50 ஆண்டுகால தமிழக அரசியலில் நீங்கா இடம்பிடித்த திட்டம் என பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கிறது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமான சத்துணவு திட்டம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதன் மூலம் அவர்களின் உடல்நலத்தினை மேம்படுத்துவதுடன், கல்வி கற்பதையும் உறுதி செய்து, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டினை களைவதே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டே, 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட சத்துணவு எனும் சாகாவரம் பெற்ற இந்த திட்டம், முதற்கட்டமாக கிராமப் புறங்களில் தொடங்கப்பட்டது. பின்னாளில் நகர்ப்புற பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. ஏழைகளின் கடவுள் என்று எம்.ஜி.ஆர் அழைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது இந்த திட்டம் தான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கும், பிள்ளையார் சுழியாக அமைந்தது எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட சத்துணவு திட்டம்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டத்திற்கு மேலும் பட்டை தீட்டப்பட்டது.
2014 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சத்துணவு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் சூடான, சுவையான கலவை சாத உணவு வகைகளையும் அறிமுகம் செய்தார். பின்னர் சத்துணவில் முட்டையை சேர்த்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இத்திட்டத்திற்கு மேலும் மெருகூட்டினார். இவ்வாறு வராற்றில் இடம் பிடித்த சத்துணவு திட்டம் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்ததோடு, பசியின்றி படிக்கவும் உதவியது.

முன்னாள் முதலமைச்சர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த திட்டத்தை அடுத்த கட்டங்களுக்கு எடுத்து சென்றனர். இதனால் மாணவர்களின் படிப்பு, பசி இரண்டுமே சமன் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2022-2023-ம் கல்வி ஆண்டில்மொத்தம் 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைத்து, அதன் மூலம் மனித வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நீண்ட நெடிய வரலாற்றினை கொண்ட சத்துணவு திட்டத்தின் தொடக்கம் முதல் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் வரை காலந்தோறும் இத்திட்டத்தில் நடைபெற்ற வியக்கதகு மாற்றங்கள் மாணவர்களின் வளர்ச்சிக்காகவே என்பதில் மாற்றமில்லை.

1922 சென்னை மாநகராட்சியில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சோதனை முயற்சியாகத் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 1925 சென்னை மாநகராட்சி முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1956 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1962 ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் 8ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் மதிய உணவுத்
திட்டப் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர். 1982-ம் ஆண்டு 5 வயது முதல் 9 வயது வரை பள்ளி செல்லும் ஏழைக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 1984-ம் ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

 

1989 பள்ளி செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இரு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம்அறிமுகம் செய்யப்பட்டது. 1997 சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கியப்பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 1998-ம் ஆண்டு 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2006-ம் ஆண்டு 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இருமுறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2007-ம் ஆண்டு 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2010-ம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் (வாரத்தில் 5 நாட்கள்) முட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு பயனாளிகளுக்குப் பலவகை கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு (இன்று) பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

 

இவ்வாறு பல்வேறு மாநிலங்களுக்கு முன் உதாரணமான சத்துணவு திட்டம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிறப்பு. ‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை’ என்னும் திருக்குறளைப் புரிந்துகொண்டால், மக்கள் நலத் திட்டங்களும் சத்துணவுத் திட்டமும் புரியும்; இந்தத் தமிழ் மரபுதான் தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.