நுங்கம்பாக்கம்: பிரபல போட்டோகிராபி நிறுவனத்தில் அதிரடி சோதனை

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் உள்ள பிரபல திருமண புகைப்படம் எடுக்கும்…

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் உள்ள பிரபல திருமண புகைப்படம் எடுக்கும் ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அஜய் பெஞ்சமின் என்பவரால் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலமான விஜயவாடா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, உள்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சிங்கப்பூர், சிக்காகோ, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்திநகர், ஜோசியர் தெருவில் அமைந்துள்ள நிறுவனத்தில் நேற்று காலை முதல் சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் சார்பில் கேமரா மற்றும் உதிரிபாகங்கள் வாங்கியது தொடர்பாக முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இரவு முழுவதும் சேவை வரித்துறை அதிகாரிகளின் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது 4 பேர் கொண்டகொண்ட குழு மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஜீரோ கிராவிட்டி ஃபோட்டோகிராபி நிறுவனத்தின் சார்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மதிப்பு குறித்தும் சோதனை நிறைவு பெற்ற பின்னரே தெரியவரும் என சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீரோ கிராவிட்டி ஃபோட்டோகிராபி நிறுவனத்தின் மீது ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.