மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்

தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை…

தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தற்போது வரை நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் குரல் கொடுப்போம் என்றார்.

பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வரியை குறைக்க, மத்திய நிதி அமைச்சரிடமும் பிரதமர் மோடியிடமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வாரா? என கேள்வி எழுப்பினார்.

மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட வந்துள்ள மத்திய குழுவினரை தமிழக அதிகாரிகள் சரியான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மத்திய குழுவினர் நேர்மையான முறையில் ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் சொன்னார். வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்றும் குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.