ஆஸ்திரேலியாவில் பணிநேரத்திற்கு பின், அலுவலகம் சார்ந்த அழைப்புகளை ஏற்க தேவையில்லை என்ற சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பணிநேரத்திற்கு பின் ஊழியர்கள் அலுவலக மின்னஞ்சல்களுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஊழியர்கள் சராசரியாக 280 மணி நேரத்துக்கு மேல் சம்பளமின்றி வேலை பார்த்துள்ளனர். அந்த நேரத்திற்கான மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலர் என்று அந்நாட்டின் ஆய்வில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில், ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்வதை தடுக்கும் Right to Disconnect சட்டம் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் அலுவலகத்திலிருந்தோ, முதலாளியிடமிருந்தோ அழைப்புகள் வந்தால் அதை நிராகரிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படியான அழைப்புகளை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்பட்சத்தில் அவர்கள் அலுவலகத்திடமோ, முதலாளியிடமே இது குறித்து விளக்கம் கேட்கலாம். இந்த அழைப்புகள் தொடரும்பட்சத்தில், அவர்கள் நியாய வேலை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கான உரிமையை பெற முடியும்.







