நடிகர் சிவாஜி கணேசனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
முனைவர் கா. வெ. சே மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” என்னும் நூல்
வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிட்டேஜ் மையத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா,
இயக்குநர்கள் பாரதிராஜா,கே. பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு,
கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பாலும், பேச்சு திறமையாலும் தனக்கென்று தனி
இடம் பிடித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். அவரது பெருமைகளையும் அவரை பற்றி பல
விதங்களில் ஆய்வு செய்து 1600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை இயக்குநர்
பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா
வெளியிட்டார்.

பின், நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, நான் ஒரு சிறுவனாக இங்கு பேசுகிறேன். தங்க பதக்கம் படம் போடி நாயக்கனூரில் ரிலீஸ் ஆனது. அப்போ சிவாஜி அங்கு வந்திருந்தார். பண்ணைபுரத்திற்கு வந்து மக்களை சந்திப்பதாக தகவல் கிடைத்தது. அப்பறம் அவரும் வந்தாரு. நாங்கள் எல்லாம் சின்ன பிள்ளைகள்.
அப்படி பார்த்த எங்கள் அண்ணன் சிவாஜி கணேசன் என்று அன்போடு கையெடுத்து
கும்பிட்டார். எனது ஸ்டுடியோவில் வரும் போது, ராசா நான் உள்ளே வரலாமா என்று
கேட்டார். என்னன்னா இப்படி சொல்றீங்க என்று எனக்கு ஒருமாதிரி ஆகி விட்டது
என்று சொல்லி உணர்சி பூர்வமாக கண்கலங்க பேசினார். ஒருநாள் முழுவதும்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாஜி ரசிகர்களை உட்கார வைத்து சிவாஜியை பற்றி பேச
வேண்டும் என்பது எனது ஆசை.
சிவாஜியிடம் இருந்து எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நேரம்
தவறாமை. அவருடன் இருந்து பேசுவதற்கு, உறவாடுவதற்கு கொடுத்து வைத்திருக்க
வேண்டும். யார் அந்த நிலவு பாடல் குறித்தும் இளையராஜா மேடையில் பேசினார்.
அந்த பாடலில் சிகரெட் குறைந்து கொண்டே வரும். ஆனால் ஒருமுறை கூட அவர் சிகரெட்
பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தாலும் சிவாஜிக்கு இணை இல்லை என்று பாராட்டி பேசியவர், அவர் நடித்த சீனில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதை எனது வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. இன்னும் சிவாஜியை பற்றி பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் என கூறினார்.
அத்துடன், இயக்குநர் எஸ்.பி முத்துராமன், சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று
வசூலிக்கும் போது, என்னிடம் நிதிக்காக வந்தார். குதிரையில் சிவாஜி இருப்பது
போல் ஒரு வெள்ளி சிலையை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று
நினைத்ததாகவும், அந்த பரிசில் யார் பெயரும் வரக்கூடாது என்றார்.
அந்த பணம் முழுவதையும் நான் கொடுத்து விடுகிறேன் என்று நான் பெருமையோடு சொல்வேனே தவிர, சுயதம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அரசு , உலகம் எதுவும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் இளையராஜா நான் செய்துள்ளேன் என்று கூறினார்.







