பிரதமர் மோடி தனது இரண்டாவது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானங்களின் வரலாறு குறித்து பார்க்கலாம்..
மணிப்பூர் விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இது 28வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும்.
சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு மக்களவைகளின் ஆட்சிக் காலத்தில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கூட கொண்டுவரப்படவில்லை.
1963 ஆம் ஆண்டு, மூன்றாவது மக்களவையின் போது, ஜவஹர்லால் நேரு அரசுக்கு எதிராக ஆச்சார்யா ஜே பி கிருபலானியால் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதம் 21 மணிநேரம் நான்கு நாட்களுக்கும் மேலாக நீடித்தது, இதில் 40 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். நேரு தனது பதிலில், “ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி அதன் இடத்தைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்லது நோக்கமாக இருக்க வேண்டும். அப்படியொரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இல்லை என்பது தற்போதைய நிகழ்வில் தெளிவாகத் தெரிகிறது. அதனால் விவாதம், பல வழிகளில் சுவாரஸ்யமாக இருந்தபோதிலும், லாபகரமானது என்று நான் நினைக்கிறேன், கொஞ்சம் உண்மையற்றது. இந்த தீர்மானத்தையும் இந்த விவாதத்தையும் தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். இந்த மாதிரியான சோதனைகளை அவ்வப்போது நடத்தினால் நல்லது என்று நான் உணர்கிறேன் என்றும் நேரு கூறினார்.
அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோராயமாக ஒரு வருடம் கழித்து 1964 இல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு எதிராக சுயேச்சை எம்.பி.யான என்.சி சாட்டர்ஜியால் முன்வைக்கப்பட்டது.
இதன்பிறகு 1964 மற்றும் 1975 க்கு இடையில், மக்களவையில் 15 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. மூன்று லால் பகதூர் சாஸ்திரிக்கு எதிராகவும், 12 இந்திரா காந்திக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டன.
இந்திரா காந்தி 1981 மற்றும் 1982 க்கு இடையில் மேலும் மூன்று நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டார். இருப்பினும், இவை எதுவும் அரசாங்கத்தை அகற்றுவதில் வெற்றிபெறவில்லை.
பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசாங்கத்திற்கு எதிராக 1979 இல் காங்கிரஸின் ஒய் பி சவானால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரண்டு நாட்களில் ஒன்பது மணிநேர விவாதத்திற்குப் பிறகு, தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பு தேசாய் ராஜினாமா செய்தார்.
1987ல் ராஜீவ் காந்தி ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார், மக்களவையில் அவருக்கு இருந்த பெரும்பான்மையின் காரணமாக எளிதாக தீர்மானத்தை தோற்கடித்தார்.
பி.வி.நரசிம்ம ராவ் 10 வது மக்களவையில் தனது பதவிக் காலத்தில் குறுகிய இடைவெளியிலேயே 2 நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார். அவருக்கு எதிரான முதல் தீர்மானத்தை 46 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். இதனை அடுத்து அடல் பிஹாரி வாஜ்பாய் கொண்டுவந்த இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நரசிம்ம ராவ் எளிதாக எதிர்கொண்டார். இதனை அடுத்து நரசிம்ம ராவ் 14 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த மூன்றாவது நம்பிக்கையில்லா தீர்மானம் சர்ச்சையில் சிக்கியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திl வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை அடுத்து 2003ல், சோனியா காந்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, பிரதமர் வாஜ்பாய் தோற்கடித்தார்.
இந்நிலையில், கடைசியாக 2018 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தது, அப்போது ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தனது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து (என்டிஏ) வெளியேறியது.
அந்த ஆண்டு மழைக்கால அமர்வில் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, ஜூலை 20 அன்று, மோடி அரசாங்கம் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தீர்மானத்திற்கு 126 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 325 எம்.பி.க்கள் தீர்மானத்தை நிராகரித்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக நாடாளுமன்றத்தில் ஆளும் அரசின் பலத்தை சோதிக்கும் வகையில் அல்லது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது நடைமுறை.





