மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன – அண்ணாமலை விமர்சனம்

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:…

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

நாளை ராமேஸ்வரத்தில் பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய விருந்திநராக கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். நாளை தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த யாத்திரை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் செல்லவுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரைக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க உள்ளார்.

மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரையானது 168 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு பகுதியிலும் மூத்த தலைவர்கள் இந்த யாத்திரையை வழிநடத்துவார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபயணமாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையாகவும் நடைபெறும். 1700 கிலோ மீட்டர் நடைபயணமாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜனவரி 20-ஆம் தேதிக்கு முன்பு யாத்திரையை முடிக்க முடிவு செய்துள்ளோம்.

யாத்திரைக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைத்துள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் அவரின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ஒரு சரித்திர சாதனையை செய்திருக்கிறது.

மக்களின் ஆதரவோடு இந்த யாத்திரை நடக்கும். யாத்திரை தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார் என்ற புத்தகம் வெளியிடப்படும். சட்டசபை தொகுதிவாரியாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்படும். இந்த யாத்திரை 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க நிச்சயம் துணைபுரியும். இதனை பாஜகவின் யாத்திரை என்று சொல்வதைவிட 2024ஆம் ஆண்டு 3வது முறையாக பிரதமராக மோடி வர மக்கள் ஆதரவு வேண்டும், பாஜக சாதனைகளை விளக்கி யாத்திரையில் பேச உள்ளோம். யாத்திரையின் நிறைவு நாள் பிரமாண்டமாக நடத்தப்படும். சில கட்சித் தலைவர்கள் தொடக்க விழாவுக்கு வருகிறார்கள். சில தலைவர்கள் அவர்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறார்கள், மேலும் சில தலைவர்கள் வேறு வேறு நாட்களில் கலந்து கொள்வார்கள்.

என்.எல்.சி விளைநிலங்கள் அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நெல் அறுவடை செய்யக்கூடிய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டு நிலத்தை கையகப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்துஎன்.எல்.சி. நிர்வாகத்திடம் பேசியதோடு, எங்களது கண்டனத்தையும் தெரிவித்து உள்ளோம்.

ஆளுநரிடம் 6 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் குறித்து புகார் அளித்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இப்போது ஆளுநரை நம்புகிறோம். நான் கொடுத்துள்ள புகார்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 அமைச்சர்கள் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க உள்ளோம். பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் ஊழல் இல்லாத தமிழ்நாடாக இது மாறும் என்பது எனது நம்பிக்கை என்று அவர் கூறினார்.

மேலும் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதை காட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, யாரு முதலமைச்சரின் பேச்சுக் குறிப்பை எழுதுகிறார்களோ, அவர்களை தான் குறை சொல்ல வேண்டும்.  முதலமைச்சரின் நாற்காலிக்கு இது போன்ற வார்த்தைகள் அழகு கிடையாது. நாங்களும் எதற்கும் தயாராக தான் இருக்கிறோம். ஊழலுக்கு உண்டான எங்களது சண்டையை நாங்கள் எப்பொழுதும் நிறுத்திக் கொள்ள முடியாது என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் யாத்திரைக்கு அழைக்க உள்ளீர்களா என்பது குறித்த கேள்விக்கு, ஒரு நல்ல தமிழகத்தை யாரெல்லாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் இந்த பாதையாத்திரைக்கு வருமாறு அழைக்கிறோம்.

 

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துளளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.