நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் ஒன்று நடக்கப் போவதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சீமான் படித்த பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அதிக உறுப்பினர் எண்ணிக்கையை பாஜகவினர் தான் வைத்துள்ளனர்.
கடலூரில் பாமக போராட்டத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நாங்களும் போராடுவோம். பயிர் விளைந்து வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், இயந்திரத்தைக் கொண்டு அதனை அளித்தால் மக்கள் வேதனை படமாட்டார்களா. மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இப்படியெல்லாம் செய்வார்களா?. ஒன்று அறுவடைக்குப் பிறகு எடுத்திருக்க வேண்டும். இல்லை விதைப்பதற்கு முன்பாகவாவது எடுத்திருக்க வேண்டும்.
இதைய எதையும் செய்யாமல் இப்படி என்.எல்.சி. நடந்துகொண்டது கொடுமையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் கொடுக்கும் நிவாரணத்தை குப்பையில் தான் கொண்டு போட வேண்டும்.
விவசாயிகளின் வேதனையை புரிந்து செயல்படும் அரசாக நாங்கள் இருக்கிறோம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். விளை நிலங்களை விட்டு வேளாண் குடிமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் போது வேளாண்மை பற்றி எதற்கு பேச வேண்டும். சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை 150 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துகொண்டு உள்ளது. தீபாவளிக்கு வடை சுடுவதற்கு வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
- பி.ஜேம்ஸ் லிசா







