உணவு தானியங்களுக்கு வரி-GSTக்கு முன்பும் இருந்தது: அமைச்சர்

உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பும் இருந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பருப்பு வகைகள், தானியங்கள், மாவு போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் நேற்று…

உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பும் இருந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

பருப்பு வகைகள், தானியங்கள், மாவு போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் நேற்று முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பருப்பு வகைகள், தானியங்கள், மாவு போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கான வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கடந்த ஜூன் 28ம் தேதி சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டிக்கு அமல்படுத்துவதற்கு முன்பும் உணவு தானியங்கள் மீது மாநில அரசுகள் வரிகளை விதித்துள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, இத்தகைய வரி மூலம் பஞ்சாப் அரசு ரூ. 2,000 கோடிக்கு மேலும், உத்தரப்பிரதேச அரசு ரூ. 700 கோடிக்கும் மேலும் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கருத்தில் கொண்டே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, பிராண்டட் தானியங்கள், பருப்பு வகைகள், மாவு ஆகியவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதாகவும், பிறகு, பதிவுசெய்யப்பட்ட பிராண்ட் அல்லது பிராண்டின் கீழ் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், இந்த விதிமுறையை சில புகழ்பெற்ற உற்பத்தியாளர்கள் தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட பிராண்டட் பொருட்களுக்கு வரி செலுத்தும் விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில் சங்கங்கள் இதை எதிர்த்ததாகவும், முறைகேடுகளைத் தடுக்க பேக்கேஜ் செய்யப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று அவை அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக் குழு, இது குறித்து ஆராய பல முறை கூடி ஆய்வு செய்து முறைகேடகளைத் தடுக்கும் வகையில் மாற்றங்களை பரிந்துரைத்ததாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே, ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் இந்தப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முறை மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பருப்பு, கோதுமை, ஓட்ஸ், மைதா, அரிசி, ரவா, தயிர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்கள் சில்லறை முறையில் விற்கப்படும்போது அவற்றுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் உட்பட அனைத்தும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

வரி கசிவைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மிகவும் அவசியமான ஒன்று என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய குழு தீர ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.