நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஓயோவில் நடைபெற்ற கேளிக்கை கண்காட்சி நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 32 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஓயோவின் தலைநகர் இபாடானில் உள்ள பசோருன் நகரில் உள்ள இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிகழ்ச்சியில் 5000 குழந்தைகளுக்கு உணவு மற்றும் பணப்பரிசு வழங்குவதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு நேற்று காலை 5 மணிக்கே கிட்டத்தட்ட 8,000 பேர் வந்துள்ளனர்.
நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த போது எல்லோரும் ஒன்று கூடியுள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 8 பேரையும் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பணப்பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டதால் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்விற்கு சென்றதாக கூறப்படுகிறது.







