நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் | ஒருவர் கைது…!

செய்தியாளர் நேசப்பிரபு தாக்கப்பட்ட வழக்கில் உடந்தையாக இருந்த திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.    நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

செய்தியாளர் நேசப்பிரபு தாக்கப்பட்ட வழக்கில் உடந்தையாக இருந்த திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.   

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் கடந்த வியாழக்கிழமை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை செய்யப்பட்டது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் நேசப்பிரபு தாக்கப்பட்ட வழக்கில் உடந்தையாக இருந்த திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற குற்றவாளி பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் பகுதியில் பதுங்கி இருப்பதாக திருப்பூர் காவல் துறையினர் கொடுத்த தகவல் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் ராஜாமடம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஹரிஹரன் என்ற குற்றவாளியை மடக்கி பிடித்து திருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.