சுமார் 73 சதவீத வாக்குகளை பெற்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார் பாஜக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கிய ஜெகதீப் தன்கர். யார் அவர்…அரசியல் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை என்ன?…இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்….
காங்கிரசில் அரசியல் வாழ்வை தொடங்கி, ஜனதாவில் உச்சம் தொட்டு மத்திய அமைச்சராகி, பின்பு பாஜகவில் இணைந்து மாநில ஆளுநராகி, இப்போது குடியரசு துணைத்தலைவராக உயர்ந்துள்ளார் ஜெகதீப் தன்கர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர், 1951ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். 1979ல் ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இளவயது முதலே வழக்கறிஞர் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டார். நாற்பது ஆண்டு காலம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். உச்ச நீதமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும் தன்கர் இருக்கிறார்.
முழு நேரமும் தொழில் முறை வழக்கறிஞராக இருந்த ஜெகதீப் தன்கர், ஜனதா கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பை வகித்தார். முன்னாள் துணைப்பிரதமர் தேவிலாலை பின்பற்றி அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
1989ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து, ஜனதா தளம் கட்சி சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.1990ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார் தன்கர்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது காங்கிரசில் இணைந்தார்.
1993ம் ஆண்டு கிஷன்கர் சட்டப்பேரவை தொகுதியில் வென்று ,ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். ஜாட் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்தவர். சில ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதாவில் இணைந்தார். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் தன்கர் நியமிக்கப்பட்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்தபோது, முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், கடும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் – மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மோதல் என தலைப்பு செய்தியானது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தாபானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறைகளை தடுக்க மம்தா பானர்ஜி தவறியதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தானோ நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பிர்பூம் வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க மம்தா பானர்ஜி அரசு முயல்வதாக பகிரங்கமாக ஜெகதீப் தன்கர் எழுதிய கடிதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடிதம் மூலமாக மேற்குவங்க ஆளுநரும், அம்மாநில முதலமைச்சரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே சென்றது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிவிட்டரிலும் இருவருக்கிடையே கடுமையான கருத்துமோதல்கள் நிகழ்ந்தன. ஒருகட்டத்தில் ஆளுநரின் டிவிட்டர் பதிவுகள் தனக்குவராத வகையில் அவரது டிவிட்டர் கணக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் ப்ளாக் செய்தார் மம்தாபானர்ஜி. ஜெகதீப் தன்கரை மேற்கு வங்க ஆளுநர் பதவியிலிருந்து மாற்றக்கோரி குடியரசு தலைவருக்கும் மனு கொடுத்தது திரிணாமுல் காங்கிரஸ்,.
இந்நிலையில் அவரை குடியரசு துணை தலைவர் தேர்தலில் களம் இறக்கி திரிணாமுல் காங்கிரசை அதிர்ச்சி அடையவைத்தது பாஜக. ஜெகதீப் தன்கரை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கடுமையாக வேலை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இந்த தேர்தலிலிருந்தே விலகுவதாகவும் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்து எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடைச் செய்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் சுமார் 73 சதவீத வாக்குகளை பெற்று நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர்.