23 மாவட்டங்களில் துணிக்கடை, நகைக் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதையடுத்து அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட தளர்வுகள் நாளை காலை முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனிடையே பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் கருத்துகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி, வகை 2ல் உள்ள மாவட்டங்களில், துணிக்கடைகள், நகை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







