கட்டுரைகள்

புதிய மாநகராட்சிகளும், உள்ளாட்சித் தேர்தலும்!


யுவராம் பரமசிவம்

கட்டுரையாளர்

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 6 நகராட்சிகளை மாநகராட்சிகளாக விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலுவையில் உள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே எது போன்ற திருப்பத்தை உண்டு செய்யும் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

மாநகராட்சிகளின் வரலாறு…

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகவும் பழமையான மாநகராட்சி என்றால் அது சென்னை பெருநகர மாநகராட்சி தான். 1994ம் ஆண்டு வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி என மொத்தம் 6 மாநகராட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்தன. இதில் முதன்மை மாநகராட்சியாகச் சென்னையும், இரண்டாவது பெரிய மாநகராட்சியாக கோயம்புத்தூரும், மூன்றாவதாகத் திருச்சியும் முறையே 4, 5 மற்றும் 6வதாக மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளும் இருந்தன. இந்த மாநகராட்சிகள் அனைத்தும் மக்கள் தொகை மற்றும் வருவாய் அளவை பொறுத்தே முதன்மை மாநகராட்சிகளாகக் கணக்கிடப்படுகிறது. 1994க்கு பின்னர் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அதாவது 2008ம் ஆண்டு அக்டோபர் 26ல் திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அதே ஆண்டில் தொடர்ச்சியாக ஜனவரி 1ம் நாள் ஈரோடு மாநகராட்சியும் ஆகஸ்ட் 1ம் நாள் வேலூர் மாநகராட்சியும், ஆகஸ்ட் 5ம் நாள் தூத்துக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக 4வது முறையாகப் பதவியேற்ற பின்னர் 2014ம் ஆண்டு, பிப்ரவரி 19ல் தஞ்சாவூர் மாநகராட்சியும், அதே ஆண்டு ஏப்ரம் 10ம் தேதி திண்டுக்கல் மாநகராட்சியும் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த மாநகராட்சிகளின் உருவாக்கத்தோடு தமிழ்நாட்டின் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12ஆக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தரம் உயர்த்தப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சிக்கு, இந்த ஆண்டின் சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சிக்கான விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றைத் தொடர்ந்து கடந்த 2019ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது பிப்ரவரி 14ல் ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. ராணுவத் தளவாட ஆலை, ராணுவத்திற்கான ஆடை தயாரிக்கும் ஆலைகள் உள்ள ஆவடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 2019ம் ஆண்டில் ஜூன் 17ம் தேதி ஆவடி, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளை ஒன்றிணைத்து ஆவடி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1994 வரை தமிழ்நாட்டில் மொத்தம் 6 மாநகராட்சிகள் இருந்த நிலையில் 2019 ல் 15 ஆக உயர்ந்தது. மேலும் தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய 6 மாநகராட்சிகளால் தமிழ்நாட்டின் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள்…

தமிழ்நாட்டின் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கரூர், கும்பகோணம் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என். நேரு கடந்த 24ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனுடன் திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் அருகில் உள்ள நகர கட்டமைப்புடைய பகுதிகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிலங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருத்தப்பட்டி, மதுக்கரை, வடலூர், கோடக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய 28 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களிடையே இது போன்ற மாவட்ட பிரிப்புகள், மாநகராட்சி விரிவாக்கங்கள் கண்டிப்பாகக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நகர்ப்புற மக்கள் தொகையின் பெருக்கம் மற்றும் மக்களுக்கான முறையான நிர்வாக வசதியை உறுதிப் படுத்துதல் போன்ற காரணிகளே புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கம், மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்ய அடிப்படையாக உள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் அரசைப் பற்றிய கருத்து மக்களிடையே வரவேற்கத்தக்கதாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் ஜனவரி 2020 ல் வெளியாகி உள்ளாட்சி நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் பிரிந்ததன் காரணமாகக் குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த தேர்தலை நடப்பு மாதமான செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான வேலைகளை மாநில தேர்தல் ஆணையம் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டாலும் அரசியல் கட்சிகள் ஆயுத்தமாவாத நிலையே நிலவுகிறது. தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை…

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்கள் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டின் வட மாவட்டங்களாக உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட்டது. அதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 76,59,720 ஆக உள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் 37,77,524 ஆண் வாக்காளர்களும் 38,81,361 பெண் வாக்காளர்களும் அடங்குவர். இதில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 13,83,687 வாக்காளர்களும், குறைந்த அளவாகத் திருப்பத்தூரில் 6,64,108 வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கான வியூகமா?

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து தேர்தல் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த மாதம் இல்லையென்றாலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட மாவட்ட மக்களிடையே நம்பிக்கையைப் பெற மாநகராட்சி விரிவாக்கம் ஊன்றுகோலாக இருக்கும் எனப் பேசப்பட்டாலும், தமிழக மக்களின் மனநிலை தேர்தலின் முடிவுக்குப் பின் தான் தெரியும். மாநகராட்சி விரிவாக்கத்தை யார் எந்த விதமாக வருணித்தாலும் இது மக்களுக்கு அவசியமானது என்பது தான் உண்மை.

Advertisement:
SHARE

Related posts

உதயநிதி ஸ்டாலின்: மக்களின் ‘நண்பேன்டா’

இனியனின் சமூகம் சார்ந்த 7 பதில்கள்!

Niruban Chakkaaravarthi

வங்கக் கடலோரம் முத்தமிழறிஞருக்கு நினைவிடம்

Saravana Kumar