’2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள்’

தமிழ்நாட்டில் உள்ள 2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு…

தமிழ்நாட்டில் உள்ள 2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு புதிய பள்ளிக் கட்டிடங்களைத் திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் அங்கன்வாடி கட்டிடத்தையும் திறந்து வைத்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியர்கள் வசதிக்காகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இவர்களுக்குக் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீடு கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘’2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி’ – சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், 13,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகச் சென்னை, மற்றும் மதுரை நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து வரும் 7 அல்லது 8-ஆம் தேதி தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிதெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 2500 மரத்தடி பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏதுவாக நபார்டு வங்கி மூலம் 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சட்டமன்ற, நாடாளுமன்ற மாவட்ட உறுப்பினர்களின் நிதி, ஆட்சியர்களின் நிதிகளைக் கொண்டு கட்டிடங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.