வியாபாரி ஒருவர் ‘தக்காளி ஐஸ்கிரீம்’ என்கிற புதுவிதமான ஐஸ்கிரீம் கலவையை தயாரிப்பது தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
பொதுவாக கோடை காலங்களில் தொண்டைக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உண்ணப்படும் உணவுகளில் ஐஸ்கிரீம் மிக முக்கியமான ஒன்று. இத்தகைய ஐஸ்கிரீம் வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி ,சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் என பல பிளேவர்களில் வருவதோடு. ஃபலூடா, ஸ்டிக்கி டாபி புடிங், செர்ரி வொயிட்சாக்லெட் கேரமல் பார் என வித்தியாச வித்யாசமான கலவைகளோடும் நாம் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ஒரு தெருவோர வியாபாரி ஒருவர் ‘தக்காளி ஐஸ்கிரீம்’ என்கிற புதுவிதமான ஐஸ்கிரீம் கலவையை தயாரித்து தற்போது அது தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக இரு வெவ்வேறு சுவை உடைய உணவு பொருட்களை இணைத்து புதிய உணவை உருவாக்குவது என்பது இப்போதெல்லாம் ட்ரெண்ட் ஆகிவிட்டது. அப்படி செய்யும்போது அந்த உணவின் சிறப்பு தன்மையை சிதைக்காமல், தனித்துவமான மற்றும் சுவையான ஒன்றைச் செய்வதில் சிலர் வெற்றி பெற்றாலும், மற்றவர்கள் நேர் எதிராக இரண்டின் தனித்தன்மையையும் அழித்து உண்ணமுடியாத படி பரிமாறுகிறார்கள். அதற்கு உதாரணமாக ஃபேன்டா மேகி, சாக்லேட் ஆம்லெட், மட்கா தோசை போன்றவைகளை சொல்லலாம். ஏன் சமீபத்தில் கூட டெல்லியில் உள்ள சாந்தினி சௌக்கை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் ‘சௌமைன் ஆம்லெட்’ என்கிற வித்யாசமான ரெசிபியை
தயாரித்து பலரது முகத்தையும் சுளிக்க செய்திருந்தார். அந்த வரிசையில் தற்போது ‘தக்காளி ஐஸ்கிரீம்’ என்கிற வித்யாசமான உணவு பலரது கவனத்தை பெற்றிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கடும் பேசு பொருளாக மாறியுள்ளது.
@aapkabhai_foody என்கிற இன்ஸ்டா பயனர் பகிர்ந்திருந்த அந்த வீடியோவில் ஒரு தெருவோர வியாபாரி ஒருவர் குளிரூட்டப்பட்ட ஒரு ரெபிரிஜிரேட்டர் தவாயில் முதலில் வெட்டப்பட்ட தக்காளியை போட்டு நசுக்குகிறார் பின்னர் அதனுடன் பாலுடன் கலந்த ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட் கலவை ஊற்றப்பட்டு, ஒன்றோடு ஒன்று கலந்து ‘தக்காளி ஐஸ்கிரீம்’ தயாரிக்கப்படுகிறது. பின்னர் இறுதியாக வெட்டப்பட்ட தக்காளியால் அலங்கரிக்கப்பட்டு ஒரு பவுலில் அழகாக பரிமாறப்படுவது போல் காட்டப்படுகிறது. கடந்த மே 12 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று, 6 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்திருந்தாலும்,
நெட்டிசன்கள் மத்தியில் பல மோசமான கமெண்ட்களை பெற்று வைரலாகி வருகின்றது.
- பி.ஜேம்ஸ் லிசா









