மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடபெற்றது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு நாடு முழுவதும் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வெழுதினர். மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 95 சதவீதம் பேர் தேர்வை எழுதினர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் நீட் தேர்வு நடபெற்ற நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுத சென்ற மாணவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு சென்று தேர்வு எழுதினர். பின்னர் தேர்வு எழுதி முடித்த பின், ஓ.எம்.ஆர் காகிதத்தை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே கொண்டு சென்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான முடிவுகள் தாமதாகி வந்த நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வாக தெரிவித்துள்ளது. வரும் 30-ம் தேதி இறுதி விடைக்குறிப்பு ஓஎம்ஆர் தாள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையே தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும். அந்த மின்னஞ்சல் வருவதற்குத் தாமதமானால் நாமே நம்முடைய தேர்வு முடிவுகளை நீட் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்ய neet.nta.nic.in என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொடுத்து நம்முடைய தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
நீட் தேர்வு முடிவுகள் ஸ்கோர்கார்டு வடிவில் நீட் இணையதளத்தில் கிடைக்கும். அந்த ஸ்கோர்கார்டில் நம்முடைய அடிப்படைத் தகவல்களான வரிசை எண், பெயர் ஆகிய தகவல்களுடன் All India Rank, Category Rank மற்றும் நுழைவுத் தேர்வில் நாம் பெற்ற மதிப்பெண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு நீட் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடப் புத்தகத்தை மையமாகக் கொண்டிருந்தன என்றும் கூறப்பட்டது. எனவே, இந்தாண்டு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








