நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்திருந்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என இந்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அரசு, தனியார்மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் அல்லது அதற்கு குறைவாக (நெகட்டிவ்) எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் அதற்கு குறைவாக எடுத்திருந்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை கலந்தாய்விற்கான சுற்று-3 முதல் புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் புதுப்பிப்புகளுக்கு மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







