நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அணிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து – அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது.
இந்த மரணங்கள் அனைத்திற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசு, துணை போகும் அதிமுக மற்றும் தமிழ்நாடு ஆளுநரே காரணம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்?
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது வராத நீட், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது. நீட் விலக்கிற்காக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அ.தி.மு.க.வினர் மறைத்தனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியபோது தான், அது தமிழ்நாட்டுக்கே தெரிய வந்தது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
நீட் தேர்வை திண்க்கும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20-ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







