நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படவுள்ள, கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 T20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நாளை தொடங்குகிறது.
செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 (NEWS 7 TAMIL CRICKET LEAGUE 2023) T20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நாளை முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம் 32 அணிகள் இந்த T-20 தொடரில், குரூப் சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 குரூப்கள் பிரிக்கப்பட்டு 8 குரூப்களிலும் தலா 4 அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அதே குரூப்பில் உள்ள 3 அணிகளுடன் ஒரு முறை மோதும். இந்த குரூப் சுற்றின் முடிவில், மண்டலத்தின் இரண்டு குரூப்களிலும் முதல் இடம் பிடிக்கும் இரு அணிகள், காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெறும். காலிறுதிக்கு தகுதி பெற்ற 8 அணிகளில், மண்டலத்திற்கு ஒரு அணி வீதம் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அறையிறுதி சுற்றில் வெற்றி பெரும் இரண்டு அணிகள் கோவையில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் களம் காணும்.
மார்ச் 27 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை குரூப் T-20 போட்டிகளும், ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் காலிறுதி போட்டிகளும், ஏப்ரல் 7 ஆம் தேதி அரையிறுதி போட்டிகளும் நடைபெறும். ஏப்ரல் 12 ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் போட்டிகள் அந்தந்த மண்டலங்களிலும், அரையிறுதி போட்டிகள் மதுரை மற்றும் கோவை மண்டலங்களிலும், இறுதிப் போட்டி கோவையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி மற்றும் பிற்பகல் 1.30 மணி என 2 போட்டிகள் குரூப் சுற்றில் இடம்பெறும். காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் பிற்பகல் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு NCL 2023 Champions கோப்பையும், ரூபாய் 1,00,000 ரொக்கப் பணமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு NCL 2023 Runners கோப்பையும் ரூபாய் 50,000 ரொக்கப் பணமும் வழங்கப்படும். மேலும் சிறந்த வீரர்களுக்கான ஆட்ட நாயகன், தொடர் நாயகன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா








