முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பாதுகாப்புப் படையில் மிக முக்கியமான மற்றும் உயரிய பொறுப்பான முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பொறுப்பான முப்படைத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சி.டி.எஸ் ஜெனரல் அனில் சவுகான் வரும் மே 30-ம் தேதியுடன் தனது பணிக்காலத்தை நிறைவு செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த புதிய நியமனத்தை மேற்கொண்டுள்ளது. 1985-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த ராஜா சுப்ரமணி, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகவும், ராணுவத்தின் துணைத் தளபதியாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் போன்ற பதற்றமான பகுதிகளில் வெற்றிகரமாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

புதிய முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கும் இவர், ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் சவால்களைக் கையாள்வதில் இவரது அனுபவம் இந்தியாவிற்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
ஜெனரல் அனில் சவுகான் ஓய்வு பெற்ற பிறகு, மே மாத இறுதியில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.