நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் எச்.வினோத் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். விஜய் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் ‘ஜனநாயகன்’ படம் தான் விஜய்யின் கடைசி படம் ஆகும். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி 9-ம் தேதி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரவிமோகன், ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இதயம் கனக்கிறது விஜய் அண்ணா.. உங்களது கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக, ஒரு சகோதரனாக நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்.
உங்களுக்கு என்று ஒரு வெளியீட்டுத் தேதி தேவையில்லை.. நீங்கள் திரையில் தோன்றுவதுதான் உண்மையான ‘ஓப்பனிங்’. அந்தத் தேதி எதுவாக இருந்தாலும் சரி.. அன்றைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்!” என்று தெரிவித்துள்ளார்.







