மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றார் .
சமீபத்தில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்ட பிறகு, மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் உள்ள லாக்கரில் தேவரின் தங்க கவசம் பாதுகாக்கப்படும். அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் மீண்டும் பெறப்படும். அந்த வகையில், தங்க கவசத்தை பெறும் உரிமையை தனக்கு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணைக்கு பின்னர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை வங்கி லாக்கரிலிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஏற்கெனவே அதிமுகவின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வங்கிக்கு ஆணையிடப்பட்டது.
அந்த வகையில் இந்தாண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால், தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அதிகாரிகள் முறைப்படி இன்று ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அவர் இந்த தங்க கவசத்தை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா என்பவரிடம் வழங்கினார். அப்போது அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் அதிமுக தங்க கவசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.







