தமன் இசையில் உருவாக உள்ள ஷங்கரின் தெலுங்கு திரைப்படம்

பிப்ரவரி மாதம் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க உள்ளார் என்றும், இது ஒரு பான்-இந்திய படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியது. சில நாட்களுக்கு…

பிப்ரவரி மாதம் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க உள்ளார் என்றும், இது ஒரு பான்-இந்திய படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியது. சில நாட்களுக்கு முன்பு வரை ‘இந்தியன் 2’ தயாரிப்பாளர்களுடன் இயக்குனர் ஷங்கர் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

இந்தியன் 2 படத்தை முடிக்காமல், இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க தடை விதிக்க வேண்டும் என  லைகா தயாரிப்பு நிறுவனம்  அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

தற்போது ஷங்கர் ராம் சரணுடனான படத்தை தொடங்க தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட், நடிகர் ராம் சரணுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார் என்று தகவல்கள் வந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசைமைக்க உள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டில்  ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸின் கீழ் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரையிடப்பட உள்ளது. ஷங்கர் தெலுங்கு ஹீரோவை வைத்து படம் இயக்குவது இதுவே முதல் முறை. பான்-இந்தியா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த படம் பல மொழிகளில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.