கொலை செய்யப்பட்ட VAO உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் : மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

கொலை செய்யப்பட்ட VAO உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்  நேரில் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள…

கொலை செய்யப்பட்ட VAO உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்  நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரியும், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை அரிவாளால் கை, தலை, கழுத்து என உடலின் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள்  சம்பவம் தொடர்பாக முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த  லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மணல் கடத்தலைத் தடுத்த
காரணத்திற்காகக் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை, ராமசுப்பிரமணியம், மாரி என்ற இருவர் படுகொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், விஏஓ-வின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில் லூர்து பிரான்சிஸின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.   இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு  அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லூர்து பிரான்சிஸின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

இறுதிச் சடங்கு தேவாலயத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் மற்றும் அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.