முல்லை பெரியாறு அணை வழக்கில் நீதிமன்றத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கேரள தரப்புக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறில் தமிழ்நாடு அரசு முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்துவிட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. கேரள மாநிலத்திற்கு உரிய முன்னறிவிப்புகளை அளித்த பின்னரே தண்ணீர் திறக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று கேரள அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், இரு மாநில அரசுகளும் வெளியில் இருக்கும் நெருக்கடிகளை உச்ச நீதிமன்றத்தில் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. முல்லைப்பெரியாறில் எப்போது நீரை திறந்துவிட வேண்டும் என்பது கண்காணிப்பு குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது எனக்கூறிய நீதிபதிகள். முல்லைப்பெரியாறில் நீரை திறந்துவிடுவது தொடர்பான புகார்களை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க கேரளாவுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.







