முடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த தடையில்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவரது வீட்டின்முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி வழங்கினார்.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஏ பிரிவின் கீழ் விசாரணை நடத்தவும், 2023 பாரதிய நாகரிக் சுரகா சன்ஹிதா பிரிவு 218-ன் கீழ் வழக்கு தொடரவும் ஆளுநர் அளித்துள்ள அனுமதியின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஆளுநர் அளித்த அனுமதியின்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எந்தவிதமான துரித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஆளுநரின் நடவடிக்கைகளில் எந்த தவறும் இல்லை. சொல்லப்பட்ட உண்மைகள் தொடர்பாக விசாரணை தேவை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சித்தராமையாவின் வீட்டிற்கு அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பலர் சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சித்தராமையாவின் வீட்டின்முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.







